காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என, அரசியல் கட்சிகளிடம், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.இது தொடர்பில் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினதும் கிளிநொச்சி சங்கத்தினதும் தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை கடந்த நிலையிலும் எங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

நாங்கள் நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம். இந்த நிலையில் நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (31) 315ஆவது நாள்.

இரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருகின்றோம்.

நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பினர்கள், அக்கறைச் செலுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும்.

அதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது, அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் விரும்பவில்லை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் எனவும் யோகராசா கனகரஞ்சனி தெரிவித்தார்