ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நிலவானது, இன்று பூமிக்கு மிக அருகில் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு பூமியை நோக்கி நெருங்கிவரும் நிலவானது, பூமியிலிருந்து இன்று சுமார் 3,56,565 கிலோமீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர், இலங்கையின் கிழக்கு வானில் மிக பிரகாசமானதும், மிக பெரியதுமான நிலவை அவதானிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் இரண்டாம் தேதி கிழக்கு வானில் நிலவு மறைவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பிரகாசமான நிலவை அவதானிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.
இவ்வாறான அரிய சந்தர்ப்பம் எதிர்வரும் பௌர்ணமி தினமான ஜனவரி மாதம் 31ஆம் தேதியும் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலவானது பூமிக்கு அருகில் பயணம் செய்வதனால், நிலநடுக்கம், சுனாமி, சுறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.