இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. பொதுநலவாய நாடு என்ற வகையில் இலங்கையிடன் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜனநாயகத்தை பலப்படுத்துதல், பொருளாதார அபிவிருத்தி, விசேட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் விசேட வர்த்தக துறைகளில் இலங்கை கடந்த காலத்தில் முன்னெடுத்த செயற்திட்டங்களில் அதிக முன்னேற்றத்தினை அவதானிக்க முடிந்துள்ளதாக அக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். புதிய தொழில்நுட்பம், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் கல்வி வாய்ப்புக்களை மேலும் பயனுள்ளதாக்குவதற்கு இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக இரு நாட்டு உறவுகளை மேலும் உறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, பிரித்தானிய பாராளுமன்ற குழு சார்பில் மிச்செல் டொன்லன், கிரிஸ் கிறீன், ஜோன் லம்ஒன்ட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.