நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும். 22 ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களினதும், 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியுமென்றும் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 560,000 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனவென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, “தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், எதிர்வரும் 8ஆம் திகதியன்று அத்தாட்சிப்படுத்தப்படும்” என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். “அதன்பின்னர், தபால் வாக்களிப்புக்கான பொதிகள், தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு, எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.