கொழும்பில் காணப்படுகின்ற சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அந்த மேம்பால வீதியின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடைய இருந்த போதிலும் 11 மாத காலத்தில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த வீதி 534 மீற்றர் நீளமுடையது என்பதுடன், 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபா என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்ட நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப் பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.