உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 188 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். அரச வாகனங்களைப் பயன்படுத்தியமை, மக்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவில் இதுவரை 69 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் தொடர்பிலேயே தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அலரிமாளிகையில் பாடசாலை அதிபர்களுக்கான விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டமை குறித்தும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேசங்களிலுள்ள ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் தேர்தல் கண்காணிப்பு பிரிவிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனை தவிர நாடு முழுவதிலும் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இவ்வாறு பரிசுகள் வழங்கப்படுகின்றமையானது ஊடகங்களோ பொலிஸாரோ அறியாத வகையில், ஆதாரங்களின்றி விநியோகிக்கப்படுதாக தேர்தல் கண்காணிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட நபர்களை அச்சுறுத்துதல், மிரட்டுதல் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.