மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று, வெள்ளைக்கல்மலைப் பகுதியில், காட்டு யானையொன்றின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் 51 வயதான முத்துலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர், மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது, காட்டிலிருந்து வந்த யானைகளில் ஒன்று, அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது. இது தொடர்பில், அயல் வாடிகளில் இருந்தவர்கள் கண்டு, பொலிஸாருக்குத் தெரிவித்ததை அடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.