யாழ் குடாநாட்டிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பலாலி விமான நிலையத்தினை நேற்றுக்காலை 10.00 மணியளவில் சென்றடைந்த ஐவர் அடங்கிய இந்தக் குழுவினர், யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராய்ச்சியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், நண்பகல் 12.30 அளவில் ஆளுநரை சந்தித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான ரணில் ஜெயவர்த்தன, கிறிஸ் கிறீன், டான் காடன், மிச்செலி டொனாலன், ஹெலி தொல்ஹாஸ் ஆகியோரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலர் எப்.எக்ஸ். செல்வநாயகம் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
யுத்தத்தின் பின்னரான வடமாகாண மக்களின் காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் பாதுகாப்புத் தளர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், நல்லிணக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.