யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழர்கள், அங்குள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தமிழக அரசு உணவு, உடை, படிபணம் உட்பட சில சலுகைகளையும் செய்து வருகிறது. அப்படி இருந்தும் கூட கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர்கள் பலர் இலங்கையில் உள்ள சொந்த ஊர்களுக்கு திரும்பியும் வருகிறார்கள். ஆனால், பெரும்பாலான அகதிகளோ இன்னும் அந்தந்த பகுதி முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து, தோட்டனூத்து, பழனி அருகே உள்ள விருப்பாச்சி, சிவகரிபட்டி, புளியம்பட்டி போன்ற அகதிகள் முகாம்களை ஆய்வுசெய்ய டெல்லியில் இருந்து மத்திய உள்துறை செயலாளர்களான பரிடா.சட்டீஸ்குமார் குழு வந்தது. இப்படி ஆய்வு செய்ய வந்த குழுவிடம் அங்குள்ள ஈழத்தமிழர்கள்.. ‘அகதிகள் முகாமில் இருக்கும் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

அதுபோல் நாங்கள் அகதிகள் என்பதால் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி படிக்க எங்கள் பிள்ளைகள் போக முடியவில்லை. அதுபோல் நாங்கள் தொடந்து இங்கேயே இருக்க விரும்புகிறோம். அதனால், ‘எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். இதையெல்லாம் பொறுமையாக கேட்ட இந்த குழுவினர் உங்கள் கோரிக்கையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர் என, இந்திய ஊடகச் செய்திகள் வெளியிட்டுள்ளன.