காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின், 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வர்ட் கலந்துகொள்ளவுள்ளார். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். பிரித்தானிய அரச குடும்பத்துக்கான அழைப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அனுப்பப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.

இதேவேளை, 1998ஆம் ஆண்டு இலங்கையின் 50ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள மகாராணியின் இரண்டாவது புதல்வர் சார்ள்ஸ் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் 70ஆவது சுதந்திரன தின விழாவில், கலந்துள்ளுமாறு, ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாட்டு அரச குடும்பத்தினருக்கு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவானது மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்கள் மட்டத்திலும் கொண்டாடப்படவுள்ளது. 70ஆவது சுதந்திர தினம் “ஒரே விடயம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.