உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 78 முறைப்பாடுகள் காவல்துறை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 9ஆம் திகதிமுதல் நேற்றுவரையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 37 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொகமட் இதனை தெரிவித்துள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேர்தல் காரியாலயம், மாவட்ட செயலாளர் காரியாலயம் மற்றும் காவல்துறை நிலையங்கள் என்பனவற்றில் எதிர்வரும் 22ஆம் திகதி அஞ்சல் மூலமான வாக்களிப்புக்களை மேற்கொள்ள முடியும். ஏனைய அரச சேவையாளர்கள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.