யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிப நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியுள்ள சம்பவம் சிசிரீவி பாகாப்பு புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் அந்த நிறுவனப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு யாழப்பாணம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய அந்த தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் பணிப்பாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர், புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆவார். நேற்றுமாலை குறித்த நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைந்த நபர் அங்கிருந்த செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கியுள்ளார். பின்னர் தான் கொண்டுவந்த கத்தியால் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவரை மடக்கிப்பிடிக்க அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் முற்பட்டுள்ளனர்.

இதனால் தடுமாறிய அந்த மர்ம நபர் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடியபோது நிறுவன ஊழியர்கள் துரத்திப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.