யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் இலங்கையும், இந்தியாவும் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடமிருந்து 45.27 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள கடந்த ஆண்டு மேமாதம் அமைச்சரவை அனுமதியளித்தது. இதனடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம், இலங்கை துறைமுக அதிகாரசபையால் கையாளப்படவுள்ளது. வடக்கின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.