சிறுவர் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. ஜெனீவாவில் இந்த மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.

18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில், இந்த ஆய்வு இடம்பெறும். இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளிடம், சிறுவர் உரிமைகளின் நிலைமைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.