சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதி ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ள தொழிற்சங்கத்திற்கும், சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நிர்வாகத்துறையினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பித்தது. இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளத்திற்கு எதிராக கடந்த 3 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜயவர்தனபுர வைத்தியசாலையில், கைரேகை இயந்திரத்தை தற்காலிகமாக அகற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தாதியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற பேச்சுவாரத்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமது தீர்மானம் குறித்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசித் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடமை நேர வரவை பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை சிறீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.