மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு மீனவர்கள் தாக்கியதில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது மீன்பிடி திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல்களை மேற்கொண்ட மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.