உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பிலான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்கி இதன்போது தெரிவித்தார். சிங்கப்பூரின் பிரதமர் ஒருவர் 13 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.