யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருட்டுச்சம்பவம் ஒன்றிற்க்காக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கொலை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மூதாட்டியின் கைப்பையில் 3 சங்கிலிகள் 2 காப்புகள் மற்றும் 40,500 ரூபா பணம் என்பன காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தனிமையில் வாழ்ந்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டி கடந்த 21 ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.