(எம்.நியூட்டன்)

விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் பலம் எவ்வாறு குறைந்ததோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் குறைந்தால் தமிழ் மக்களின் பலம் மீளவும் குறைந்து விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று அதனை நிறைவேற்றினால் யாழ். மாநகரம் மிக அழகான பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இவ்வாறு அதற்கேற்றவாறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியற் தீர்வை பெற்றுக் கொள்கின்ற அதேநேரத்தில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.இவற்றை யாழ். மாநகரச சபை செய்து ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்தச் செயற்பாடுகளுக்கு அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொள்கின்றபோது அதனை இலஞ்சம் என்றும் சிலர் கூறுவார்கள்.

அரசியலுக்காக எதனையும் கூறலாம் என்ற நிலைப்பாடு தற்போது வந்துவிட்டது. எனினும், நாம் அபிவிருத்தியோடு சேர்ந்ததாக எமது உணர்வுகளும், உரிமையும் மழுங்கடிக்காத, விட்டுக்கொடுக்காத வகையில் அரசியற் தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

இதற்கு நாம் எமது பலத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களின் பலம் ஒற்றுமையாகவே இருக்கின்றது. ஆகவே, எமது பலம் குறைந்தால் தமிழ் மக்களின் பலமும் குறைந்துவிடும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பலமாக இருந்த தமிழ் மக்களுக்கு அவர்களின் பின்னர் எவ்வாறு பலம் குறைந்ததோ அதேபோன்ற நிலைமையே கூட்டமைப்பின் பலம் குறைந்தாலும் தமிழ் மக்களின் பலம் குறையும் என்ற நிலை உள்ளது. புலிகளிற்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்களின் பலமாக கூட்டமைப்பிற்கே மக்கள் ஆணையை வழங்கி வந்திருக்கின்றனர்.

இன்றைக்கு தமிழ் மக்களின் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. கூட்டமைப்பு தான் அரசாங்கத்துடனும் சர்வதேசத்துடனும் பேரம் பேசும் சக்தியாக இருக்கின்றது.

ஆகவே, கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்துவதனூடாக தம்மையும் பலப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு கூட்டமைப்ப பலமான அமைப்பாக இருப்பதனூடாகவே தொடர்ந்து அரசியற் தீர்வு மற்றும் அபிவிருத்தி என்ற பாதையில் சிறப்பாக பயணிக்க முடியும் என்றார்.

(நன்றி : வீரகேசரி 24.01.02018)