வன்னி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரொருவரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,

வட்டாரங்கள் பிரிப்பதில்கூட முரண்பாடுகள் இருந்தன. இதற்குக் காரணம் எமது ஆதரவாளர்கள், முன்பிருந்ததை விட மிக ஆர்வமாக தாம் தேர்தலில் நிற்க வேண்டும் என வந்தார்கள். இதனால் எமது ஆதரவாளர்களுக்காக நாமும் எங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கினோம். கடைசி நேரத்தில் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் தாமும் தேர்தலில் நிற்க வேண்டுமென நின்றார்கள். அப்போதே எமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லப் போகின்றது என்பதை அவர்கள் பறைசாற்றுகின்றார்கள் என்பதை உணர்ந்தோம். ஏனெனில் வெல்லக்கூடிய கட்சியில்தான் வேட்பாளர்கள் போட்டிபோட்டு வருவார்கள்.இவ்வாறான நிலையில் இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது. அது இறுதி அறிக்கை அல்ல. அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? ஏன்பதனை முடிவெடுக்க முடியும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு 80 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும் தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம்.

அரசினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதயானது, ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. பட்ஜெட்டுக்கு வாக்களிப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுடன், வன்னி மக்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அந்தந்த மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதியானது மாவட்ட அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும். இதனைத் திரித்து சிலர் பொய்யாக பரப்புரை செய்கின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அரசிடமிருந்து பிரத்தியேகமாக நிதியை பெற்று அபிவிருத்தி வேலைகளை செய்திருந்தார் என்றார். (நன்றி தினக்குரல் 24.01.2018)