உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுக்கான விநியோகிம் இன்றும் இடம்பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 3ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த முறை தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, பட்டியலில் உள்ளவர்களை தவிர்ந்த யாரும் உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, யாரேனும் ஒரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவி விலகினால், பட்டியலில் உள்ள ஒருவரே அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதற்காகவே வேட்புமனுப் பட்டியலில் மேலதிகமாக 3 பேர் இணைக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.