மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீனை தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

ஜனாதிபதி யமீன் சட்டங்களை மீறியுள்ளதால் அவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மவ்மூன் அப்துல் கயூம் மற்றும் மொஹமட் நஷீட் உள்ளிட்ட மாலைதீவுகளின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏனைய அனைத்து தலைவர்களும் மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.ஊழல் மோசடி, உறவினர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் பொது சொத்துக்களை தவறாக கையாண்டமை, அரசியலமைப்பை மீறியமை, சட்டத்தை பாதுகாக்க தவறியமை, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்தமை, ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்காமை உள்ளிட்ட குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.