ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முற்பகல் சந்தித்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் இலங்கை தொடர்பான செயற்பாட்டுக்குரிய குழுவின் தலைவர் சிரேஷ்டாபதி சிவராஜ் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிதியுதவி மற்றும் அவற்றால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வயம்ப எல அபிவிருத்தி திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் அனுசரணை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக பணிப்பாளர் சபையினர் தெரிவித்துள்ளனர்.