வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமாகவோவும், தொலைபேசி ஊடாகவும் கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அஞ்சல் மூலம் தற்போது கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காதவர்கள் தமது பிரதேச அஞ்சல் நிலையத்திற்குச் சென்று வினவுவதன்மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், அரசியல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய இந்த கோரிக்கையை விடுப்பதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

அரசியல் செயற்பாடுகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுவர். எனவே, இது தொடர்பான தகவல்களை 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவரரான சட்டத்தரணி மரினி த லிவேரா தெரிவித்துள்ளார்.