சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவும் அடங்குகின்றார். ஏனைய இருவரும் உயர் பதவிகளை வகிக்கின்ற பொலிஸ் அதிகாரிகளாவர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவானால் இந்த பயணத்தடை உத்தரவு நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவுக்கு மேலதிகமாக, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றம் முன்னாள் சிஷே்ட பொலிஸ் அதிகாரி ஹேமன்ன அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்தப் பணயத்தடை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க படுகொலைத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, சாட்சிகளை இல்லாமற் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி உப-பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே, குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர். அதனடிப்படையில், சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர், நீதவான் வாசஸ்தலத்தில், நேற்றிரவு 10:30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை ஆஜர்படுத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின், கூட்டுக்கொள்ளை விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சில் இருந்த உயரதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரமே, உயர் பொலிஸ் அதிகாரிகள், லசந்த படுகொலைச் சம்பந்தமான சாட்சிகளை இல்லாமற்செய்துள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.