பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதிபத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது முற்றாக சட்டத்திற்கு மாறானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றி அந்தக் காணிகளை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதற்கு அனுமதித்துள்ளதுடன், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனப் பாதுகாப்பு திணைக்களம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.