இலங்கையின் 70 வது சுதந்திர தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 339 ஆவது நாளை கடந்தது. இந்நிலையில், இன்று வரை தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்றைய சுதந்திர தினத்தை எதிர்ப்பதாக தெரிவித்து, கறுப்பு கொடிகள் உயர்த்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமது உறவினர்களை தேடி தருமாறும், நீதியை சர்வதேச சமூகமாவது பெற்றுத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய சுதந்திரதினத்தை கறுப்பு உடையணிந்து, புறக்கணித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரையில் தமக்கு தீர்வு கிடைக்காமை காரணமாக இன்றைய சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.