இலங்கையின் எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் விமர்சையாக இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இதேவேளை, முப்படைகளின் பிரதானிகளும் காவல்துறைமா அதிபர், வெளிநாடுகளின் வெளிவிவகார தூதர்கள் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் கனிஷ்ட புதல்வாரன இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதியின் வருகையை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. இதேவேளை, இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றிருந்தன. வடக்கு மாகாணத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை, திருகோணமலை மாவட்ட சுதந்திர தின நிகழ்வு ஒல்லாந்தர் கடற்கரை முன்றலில் இன்றுகாலையில் நடைபெற்றது. திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.