மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை இன்றுகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்றுகாலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.