உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், நாளை புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.“தேர்தல் பிரசாரங்களுக்கான, சிறுசிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், ஒலிபெருக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலமான பிரசாரம் யாவும் அன்று நள்ளிரவு 12 மணியுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். இம்முறை வாக்களிப்புகள், 13, 400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன.
இத்தேர்தலின் ஊடாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக, இம்முறை மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். பதிவு செய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 57,252 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2017ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15,760,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.