படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த யாழ். பொன்னாலை பருத்தித்துறை வீதி விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் அண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல பிரதேசங்கள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்காக இருந்து வந்திருந்தன. ஆயினும் கடந்த அரசிலும் தற்பொதைய அரசிலும் அங்கு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆயினும் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான அந்த வீதி இதுவரை விடுவிக்கப்படாது படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் பல கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்படி வீதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக படையினரிடம் இருந்து விடுவிப்பதாக யாழ் வந்த ஐனாதிபதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று வீதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த வீதி ஊடான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இன்றுகாலை 8 மணிக்கு உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  இதன் ஆரம்ப நிகழ்வு மயிலிட்டியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் யாழ் இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.