உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒருநாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரச தகவல் திணைக்களத்திற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தகவல் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு ஆள்அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஆளடையாளத்தை உறுதி செய்யக்கூடிய 7 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. இதில் முக்கிய இடத்தில் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை இடம்பெற்றுள்ளது. தேர்தல் காரணமாக திணைக்களத்திற்கு கிடைக்கும் இதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. நாளாந்தம் 1500ற்கும் 2000ற்கும் இடைப்பட்ட அடையாள அட்டைகள் ஒருநாள் சேவையில் விநியோகிக்கப்படுகின்றன.

பொதுவான சேவையில் நாளாந்தம் சுமார் 3000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகிக்கும் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான பத்தரமுல்ல சுகுறுபாய கட்டடத்தில் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதிகரிக்கும் விண்ணப்பங்களை கையாளுவதற்காக மேலதிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.