இறுதி யுத்த காலத்தில் புலிகளால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிடைத்த தகவலின்படி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு முள்ளியவளையில் நேற்று பாதுகாப்பு தரப்பினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்படி பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட உத்தரவின்படி நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணித்தியாலங்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினரால் எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.