ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழுவொன்றை இன்று நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். கலந்துரையாடல் பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியின் தரப்பினரும், பிரதமரின் தரப்பினரும் விசேட குழுவொன்றை நியமித்து எப்படி நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்தனர்.

ஏனைய தகவல்கள் குறித்து எனக்கு தெரியாது. இங்கு நடந்தவைகளை தான் நான் கூறினேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்கான இணக்கப்பாடுகள் இங்கு எட்டப்பட்டுள்ளது. கொழும்பு அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பு நிலையில் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து விலகிச் செல்வார் என்றும் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.