மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கியதன் மூலம் தேர்தல் பெறுபேறுகள் வெளியானது முதல் பாரிய குழப்பநிலை உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டிலும் குறைவாக இருந்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சபையில் பெண்களின் நியமனத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் கட்சி அல்லது குழு தனக்குரிய ஆசனத்தையும் விட வட்டாரத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால் பட்டியலில் இருந்து எவரையும் நியமிக்க முடியாது என்றும் அதே சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அநேகமான உள்ளூராட்சி சபைகளில் பெண் பிரதிநிதிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக காரைதீவின் முடிவுகளின் படி இரண்டு பெண் பிரதிநிதிகள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிரதிநிதியை நியமிக்க முடியாத நிலை அங்கு உருவாகியுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார.;