யாழ். குடாநாட்டைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதியர் 50பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு கடந்த 15ம் திகதி யாழ். இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த 50 பேரில். முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர். சேர்த்துக்கொள்ளப்பட்ட 50 பேரும் இராணுவப் பணி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என தெரியவருகிறது. இந்த 50 பேருக்கும் மாதம் தலா 40ஆயிரம் ரூபா சம்பளத்துடன், உணவு, போக்குவரத்து, தங்குமிட, மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ வசதிகள் மேற்படி இளைஞர், யுவதிகளின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளது. இவை தவிர, இராணுவத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவர்கள், பலாலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு இலட்சம் தென்னை மரங்களை வளர்க்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எவ்வாறெனினும் இலங்கை இராணுவத்தில் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர், யுவதிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேம்படுத்த முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.