தியதலாவ, கஹகொல்ல பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கஹகொல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக பஸ் முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். காயமடைந்தவர்களுள் பெண்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காயமடைந்த 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும். இந்நிலையில், இராணுவத்தினரும் வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.