மாலைதீவில் தேசிய அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மீள கட்டுயெழுப்புமாறு முன்வைக்கப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்களை மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவசர கால நிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க அந்நாட்டு ஜனாதிபதி நேற்றையதினம் பாராளுமன்ற அனுமதியை கோரியிருந்தார்.

பாராளுமன்ற அமர்வை புறக்கணித்து எதிர்கட்சியினர் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். கோரமின்மை காரணமாக அவசரகால நிலையை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசர கால நிலையை நீடிக்க அனுமதியளித்துள்ளனர். மாலைதீவுகளின் தேசிய அவசர கால நிலை நீடிப்பிற்கு இந்தியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.