விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்களுக்கு சேவை செய்வதற்காக நம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு இதுபோன்ற மாற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் கயந்த கருணாதிலக, எதிர்வரும் இரு வாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறினார்.

அதேநேரம் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிலும் மாற்றங்கள் செய்ய எதிர்பார்ததுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.