காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் நியமித்துள்ளார்.
இதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அலுவலகத்திற்கு ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போனோர் தொடர்பான அலுவலக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டபோதும், குறித்த அலுவலகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளது. காணாமற்போனோர் அலுவலகத்திற்கான புதிய குழுவின் உறுப்பினர்களுடைய நியமனக் கடிதங்கள் நேற்று தமக்கு கிடைத்ததாக குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், எதிர்வரும் வாரங்களில் உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்து எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டில் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது.
இந்த அலுவலகத்தின் ஊடாக, கடந்த காலங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.