“வவுனியா நகரசபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ள சு.காண்டீபன்”-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வ.வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வாக்குகளினை பெற்று நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.
இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும் என்பதுடன் பெரியோர்களின் ஆசியுடனும் இளைஞர்களின் வலுவான ஆதரவுமே என்றும் ஒரு இளைஞனை சமூக வலுவுள்ளவனாக மாற்றும், இன்று கரப்பந்தாட்ட சுற்று தொடரில் பங்குபற்றுகின்ற பதிவு செய்யப்பட்ட அனைத்து கழக வீரர்களும் வெற்றியாளர்கள். பாடப்பரப்புடன் இணைப்பாடவிதான செயற்பாடான விளையாட்டின் மூலம் தமது ஆளும் திறனை இன்னும் வலுவுள்ளதாக மாற்றி சமூகத்தில் பயணிக்க வேண்டும்.
இவ் வருடம் கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் இளைஞர் கழகங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளமையால் திறமையுள்ள பல இளைஞர்களை அறிமுகம் செய்யக்கூடிய வாய்ப்பு இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனது கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் தற்போது நான் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் என்பவற்றுடன் கலை மற்றும் கலாசார திறன்களின் வழிகாட்டி இளைஞர் சேவைகள் மன்றமும் ஒன்று என்பதனை தங்களிடம் பெருமையாக கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவி பணிப்பாளர் திரு. சிசிர, நிஸ்கோ இணைப்பாளர் திரு ரி.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பபித்தமை குறிப்பிடத்தக்கது.