இந்திய ஆழ்கடல் பகுதியில் காயமடைந்த நிலையில், படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் உட்பட சில இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய அவர்கள் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஐந்து இலங்கை மீனவர்கள், கடந்த மாதம் 14ஆம் திகதி படகு ஒன்றில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.குறித்த படகில் பயணித்தவர்களுள் 47 வயதுடைய மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நிலையில், இலங்கை தரப்பிலிருந்து வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இந்திய கடலோர காவல்துறையினரால் அவர்கள் நேற்று முன்தினம் படகுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த படகில் காயமடைந்த நிலையில் இருந்தவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த படகு இன்றைய தினம் கொச்சின் துறைமுகத்தை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.