இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் காரணமாக அதிருப்தியடைந்துள்ளதாக கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையில் தெரிவித்துள்ளன.

அத்துடன் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ள நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பிரிட்டன் அறிவித்திருக்கிறது. ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

கனடா நாட்டு பிரதிநிதி இந்த அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றுகையில், இலங்கையில் 26 வருட யுத்தம் முடிவுக்கு வந்தமை ஒரு முக்கியமான நிலைமையாகும். ஆனால் அது முதலாவது கட்டம் மட்டுமேயாகும். காயங்களை ஆற்றிக் கொள்வதற்காக முயற்சிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியுடன் இருப்பதாக தெரிகிறது.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அர்ப்பணிப்பின் தாமதம் தொடர்பில் கனடா அதிருப்தியுடனேயே இருக்கின்றது. இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு கனடா உதவ ஆர்வமாக இருக்கின்றது என்பதை வலியுறுத்துகின்றோம்.

இதற்கு இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெ ளிக்காட்ட வேண்டும். இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒரு கால அட்டவணையை முன்வைக்க வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம்.

இலங்கை மக்களின் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார். இந்த அமர்வில் பிரிட்டன் நாட்டு பிரதிநிதி இலங்கை தொடர்பில் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை அரசங்கம் முன்னெடுத்து வரும் பயனுள்ள ஈடுபாட்டை பிரிட்டன் வரவேற்க்கிறது.

ஆனால் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல்{ஹசேனின் இலங்கை குறித்த மீளாய்வை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.