அம்பாறை மாவட்டம் ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றுமாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை, அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் அடையாளம் காட்டினர். மேற்படி நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தன்னுடைய மனைவியை அச்சுறுத்துவதற்காகவே, அவ்விரு குண்டுகளையும் அவர் பொருத்தியிருந்ததாக தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.