அவுஸ்திரேலியாவில் இருந்து சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்புவதற்கான ஆவணத்தில், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் இருந்து பலவந்தமாக கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த கார்டியன் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோரும், அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரண்டு பிள்ளைகளும் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளனர். மத்திய குயின்ஸ்லேண்ட் பிலோயிலா பகுதியில் வசித்துவந்த அவர்களது வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது அவர்களை நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த வாரம் பலவந்தமாக அவர்களது வீட்டில் இருந்து 1500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மெல்பர்ன் ஏதிலிகள் முகாமிற்கு அவர்கள் மாற்றப்பட்டிருந்தனர். பின்னர் தங்களிடம் பலவந்தப்படுத்தி, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்புவதற்கான ஆவணத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர்கள் த கார்டியனிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு, குயின்ஸ்லேண்டின் பிலோயிலா நகர மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.