இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேகக்கூட்டங்களுடன் வானமும் மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடற் பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.