ஜப்பான் – இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் பேரரசர் அகிஹினோவை சந்தித்துள்ளார்.

டோக்கியே நகரில் உள்ள இம்பீரியஸ் மாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்த ஜப்பான் பேரரசர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலே நீண்ட காலமாக நிலவிவரும் உறவு இந்த வருகையின் மூலம் மேலும் வலுப்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம், மிசிகோ மகா ராணியையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்துடன், அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபேயை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.