அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர் குடும்பமொன்று தொடர்ந்தும் அங்கு வசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் இன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் பிலோலா பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வந்துள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் தற்போது மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து இணைய கையெழுத்து வேட்டைப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர். நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர் குடும்பத்தில் 2 வயது மற்றும் 9 மாத பெண் குழந்தைகளும் அடங்குகின்றனர். இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த 26 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 15 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும் 11 பேர் சுவிட்சர்லாந்தில் இருந்தும் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.