இலங்கையின் துறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்குவதற்கான எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் Nர்மு தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போது இதனைக் கூறியுள்ளார். டோக்கியோ நகரிலுள்ள பேரரசர் மாளிகையில், சக்கரவர்த்தி அகிஹிதோ மற்றும் மிசிகோ ராணயாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பழமையான உறவுகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு ஜப்பான் சக்கரவர்த்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை மக்கள் அமோக வரவேற்பளித்தமை இந்த சந்திப்பின் போது நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஜப்பான் பேரரசர் மாளிகையை ஜனாதிபதி பார்வையிட்டார். அதனை அடுத்து, டோக்கியோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.