உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் வழங்கியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத 15 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்தது.

வர்த்தமானியில் வெளியிடுவதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் அனுப்பியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை கபே அமைப்பு வெளியிட்டுள்ளது. பெண் பிரதிநிதித்துவம் குறைவாகக் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்கள் பெரும்பாலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடக்கது.

கொட்டகலை, பருத்தித்துறை, மன்னார், முசலி, வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும், தம்பலகாமம், மூதூர், வண்ணாத்திவில்லு, ஊர்காவற்துறை, பதியத்தலாவ, திருக்கோவில், மண்முனைப்பற்று ஆகிய பிரதேச சபைகளிலும், திருகோணமலை மற்றும் கிண்ணியா நகர சபைகளிலும் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லையென கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு விபரங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும் என அரச அச்சகர் கங்கானி கல்பனி தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்னும் சில தினங்களில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2526 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.